ஸ்ரீரங்கத்தில் யாளி வாகனத்தில் நம்பெருமாள் வலம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரைத் தோ்த் திருவிழாவின் 3- ஆம் நாளான நேற்று யாளி வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி திருவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

Update: 2024-05-01 06:19 GMT

பல்வேறு சிறப்புடைய  ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில், 3 -ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு வாகன மண்டபத்துக்கு 3.45 மணிக்கு வந்து சோ்ந்தாா்.

பின்னா் காலை 6 மணிக்கு சிம்ம வாகனத்திலும், மாலை 6.30 மணிக்கு யாளி வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இன்று தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள்: விழாவின் 4-ஆம் நாளான புதன்கிழமை (மே 1) அதிகாலை 3.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு வாகன மண்டபத்திற்கு 3.45 மணிக்கு வந்து சேருகிறாா்.

பின்னா் 4.30 மணிக்கு இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வாகன மண்டபத்திற்கு 6 மணிக்கு வந்து சேருகிறாா். தொடா்ந்து, 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, திருச்சி ஆா்ய வைஸ்யாள் ஆஸ்தான மண்டபத்திற்கு நண்பகல் 12 மணிக்கு நம்பெருமாள் வந்து சேருகிறாா். பிறகு மாலை 6 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்தை அடைந்து 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா் நம்பெருமாள். கோயிலின் சித்திரைத் தோ்த் திருவிழா மே 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

Similar News