மாநில அளவிலான இசை போட்டி
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான இசை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை சார்பாக, தமிழக முதலமைச்சர் பெயரிலான அறக்கட்டளை, ஆபிரகாம் பண்டிதர் நினைவு அறக்கட்டளை, தென்னாப்பிரிக்க ரெங்கசாமி பிள்ளை அறக்கட்டளை, பாரதி சங்கீத வித்யாலயா அறக்கட்டளை சிறப்பு நிகழ்வு, கலைப்புல கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. முன்னதாக, அறக்கட்டளைகள் சார்பில், மாநில அளவிலான இசைப்போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிக்கு சென்னை ராணிமேரி கல்லூரி, மதுரை ஸ்ரீசத்குரு சங்கீத வித்யாலயம், திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி போன்ற கல்லூரியிலிருந்தும், தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளில் இருந்தும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்து இசைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் சி.தியாகராஜன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பெ.இளையாப்பிள்ளை வாழ்த்திப் பேசினர்.
சென்னை அரசுக் கல்லூரி மேனாள் முதல்வர் அமுதா பாண்டியன், “ஆபிரகாம் பண்டிதரின் தமிழிசை ஆய்வு முடிவுகள்” என்னும் பொருண்மையில் சொற்பொழிவாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் இசைத்துறை பேராசிரியர் இசை வல்லுநர் முனைவர் பி.கோவிந்தராஜன், “சங்கீத கலாநிதி க.பொன்னையாப் பிள்ளையின் பாடல்களை“ கற்றுத் தந்து பயிலரங்கம் நடத்தினார்கள். விழாவில், இசைத்துறை தலைவர் முனைவர் இரா.மாதவி வரவேற்றார். இசைத்துறை இணைப்பேராசிரியர் செ.கற்பகம் நன்றி கூறினார். கௌரவ உதவிப்பேராசிரியர் முனைவர் சி.சத்தியவதி தொகுத்து வழங்கினார்.