உடல் உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உறுப்புகள் தானம் செய்து இறந்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2024-02-01 03:58 GMT
அரசு மரியாதை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த 56 வயது நபர் மூளைக்கட்டி காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதனிடையே, மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் ஒப்புக் கொண்டனர். இதன் பேரில் இவரது ஒரு சிறுநீரகம் 35 வயது ஆணுக்கு பொருத்தப்பட்டது. மற்ற உறுப்புகள் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய ஒதுக்கீட்டின்படி பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக முதல்வர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக இவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், இறந்தவரின் உடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதன், நிலைய மருத்துவ அலுவலர் ஏ. செல்வம், மருத்துவக் கண்காணிப்பாளர் சி.ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News