கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம்
பெரம்பலூரில் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின்கீழ் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு மலடு நீக்க சிகிச்சை முகாம், 4 ஊராட்சி ஒன்றியத்திற்கு தனி தனியாக முகாம்கள் நடைபெறவுள்ளது.
அதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி ஆலத்தூர் ஒன்றியம் புது அம்மாபாளையம் கிராமத்திலும், பிப்ரவரி 16ஆம் தேதி அன்று வேப்பூர் ஒன்றியம் ஒகளுர் கிராமத்திலும், பிப்ரவரி 17ஆம் தேதி அன்று பெரம்பலூர் ஒன்றியம் மேலப்புலியூர் கிராமத்திலும் மற்றும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று வேப்பந்தட்டை ஒன்றியம் மங்களமேடு கிராமத்திலும் இந்த முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் விவசாயிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை, இனப்பெருக்க பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் ஊட்டச்சத்து மேலாண்மைக்காக தாது உப்புக்கலவை வழங்கப்படும். ஆகவே இம்முகாமில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.