சேலத்தில் பரபரப்பு ; ரெயில் தண்டவாளத்தில் மயங்கி கிடந்த பெண்

சேலம் சத்திரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பெண் மயங்கி கிடப்பதை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் எஸ்.கே.சின்கா சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார்.

Update: 2024-06-02 07:22 GMT

மீட்கப்பட்ட பெண் 

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கும், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கும், விருதாச்சலம் மார்க்கத்தில் தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ரெயில் புறப்பட்டு சேலத்திற்கு வந்தது. நேற்று காலை 6.35 மணியளவில் டவுன் ரெயில் நிலையத்தை கடந்து சத்திரம் ரெயில் நிலையம் நோக்கி அந்த ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனைப் பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர்(லோகோ பைலட்) எஸ்.கே.சின்கா சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார்.

அந்த பெண் விழுந்த இடத்திற்கு 20 அடிக்கு முன்பே ரெயில் நிறுத்தப்பட்டதால் அந்த பெண் உயிர் தப்பினார். தொடர்ந்து ரெயிலில் இருந்து இறங்கிய ரெயில் என்ஜின் டிரைவர் சின்கா, ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு சுமார் 20 நிமிடம் தாமதமாக ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், தனது பெயர், ஊர் விவரத்தை தெரிவிக்க முடியாத நிலையில் இருப்பதும் தெரியவந்தது. ஆனால் அந்த பெண்ணின் கையில் ராமசாமி- ராணி என பச்சை குத்தியிருந்தார். மேலும் அப்பெண் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் சுற்றித்திரிந்து வந்துள்ளார்.

Tags:    

Similar News