வனப்பகுதிக்குள் தீ பற்றினால் கடும் நடவடிக்கை
கொடைக்கானல் தனியார் நிலத்தில் பற்றி வைத்த தீ,வனப்பகுதிக்குள் பரவினால் கடும் நடவடிக்கை வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மாவட்ட வன அலுவலர் யோகேஸ் குமார் மீனா கூறியதாவது,சீசன் தொடங்க உள்ள நிலையில் வனப்பகுதியில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களில் போதிய அளவு வாகனம் நிறுத்துமிடங்கள் கழிப்பறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பில்லர் ராக்ஸ் பகுதியில் செல்பி பாயிண்ட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும். அனைத்து சுற்றுலா இடங்களிலும் பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோடை காலம் தொடங்கியதால் தற்போது ஆங்காங்கே தனியார் பட்டா இடங்கள் மற்றும் துறை இடங்களில் தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த தீ வனப்பகுதிக்குள் பரவாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியாக 112 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வனப்பகுதியின் அருகே உள்ள கிராமங்களில் பசிக்கும் சுமார் 20 தீ கண்காணிப்பாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு துறைகள் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தீ விபத்தை தடுப்பதற்கான உபகரணங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும். மேலும் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் அவை சாட்டிலைட் மூலம் நாசா நிறுவனம் மூலமாக அனுப்பப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படும்.
சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்படும் தீ விபத்தினை கண்காணிப்பதற்காக பெருமாள் மலையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி முடிவடைந்த உடன் அனைத்து வனச்சரகப் பகுதிகளிலும் இதுபோன்ற கோபுரங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது உதவி வன பாதுகாவலர் சக்திவேல் உடன் இருந்தார்.