மாணவன் தற்கொலை

காட்பாடியில் 11ம் வகுப்பில் விரும்பிய பாடம் கிடைக்காததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-05-19 14:12 GMT

தற்கொலை 

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் அருகே கார்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத், விவசாயி. இவரது மகன் சர்வேஷ் (15), காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 351 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றான்.

பின்னர் அதே பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர தான் விரும்பிய பாடத்தை கேட்டுள்ளான். ஆனால் மதிப்பெண் குறைவாக இருந்ததால் மாணவனுக்கு விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் வீட்டிலேயே மன உளைச்சலில் சர்வேஷ் இருந்துள்ளான்.இந்த நிலையில் பெற்றோர் விவசாய வேலைக்காக நிலத்திற்கு சென்றனர்.

வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வீட்டில் சர்வேஷ் தூக்குப்போட்டு கொண்டான். சிறிதுநேரம் கழித்து நிலத்தில் இருந்து வந்த பெற்றோர், வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு இருப்பதை பார்த்து மகனை அழைத்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சர்வேஷ் தூக்கில் தொங்கியபடி இருந்தான்.

உடனடியாக அவரை மீட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சர்வேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து திருவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News