மாணவனாக மாறிய எம்.பி: முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சி

ராசிபுரம் அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ஆசிரியரின் காலில் விழுந்து எம்பி ஆசிர்வாதம் பெற்று, நினைவு பரிசு வழங்கினார்

Update: 2024-05-11 15:33 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது படித்த நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக., செயலாளரும், ராஜ்ய சபா உறுப்பினருமான KRN.இராஜேஸ்குமார் இதில் கலந்துகொண்டு தனது சக மாணவர்கள், நண்பர்களுடன் உற்சாகமாக பேசி கலந்துரையாடினார்.

இந்த மாணவர்கள் சந்திப்பின்போது, அப்போதைய ஆசிரியர்கள் பாடம் நடத்த, ராஜ்ய சபா உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் மாணவனாக மாறி மேஜையில் அமர்ந்து பாடங்களை கவனித்தார். தொடர்ந்து, கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதையை செலுத்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். ஆண்டுதோறும் இதேபோன்று ஒன்றிணைந்து பள்ளி வாழ்க்கையை நினைவு கூற வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

பள்ளிக்குத் தேவையான எவ்வித உதவிகளையும் தன் பாராளுமன்ற நிதியில் இருந்து செய்து தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் என அனைவரும் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் முன்னாள் மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி உற்சாகமாக விளையாடி மகிழ்தனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர். இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்களாகிய வசந்தகுமார், தேவேந்திரன், ஆனந்தராஜ், பிரபு மற்றும் சக முன்னாள் மாணவர்கள், மாணவிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் ஆசிரியர்கள் அய்யாவு மகேந்திரன் பெரியசாமி மற்றும் தலைமை ஆசிரியர் வரதராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் மாணவர் இடத்தில் சிறப்புரை ஆற்றி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த முன்னாள் மாணவர் ‌எம்பி கே. ஆர்.என். ராஜேஷ்குமார், அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

Tags:    

Similar News