விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விச்சுற்றுலா சென்ற மாணவர்கள்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு கல்விச்சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Update: 2024-01-07 10:48 GMT
கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 120 பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும்,

அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்த முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,

பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது,

தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக 30.11.2023 அன்று முதற்கட்டமாக 100 அரசு பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு கல்விச்சுற்றுலாவிற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்று இரண்டாம் கட்டமாக சாத்தூர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் பயிலும் 120 அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு கல்விச்சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News