பருவதமலை கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம். தென்மாதிமங்கலத்தில் உள்ள எழுமலையான் திருமண மண்டபத்தில் மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு பருவதமலை கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் ஆட்சியர் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் என்பது சுற்றுலா தளங்கள் நிறைந்த பகுதியாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் போன்று கலசபாக்கம் வட்டம், தென்மாதிமங்கலம் ஊராட்சியில் பருவதமலையில் உள்ள அருள்மிகு மல்லிகார்ஜீனர் திருக்கோயில் மிகவும் பிரசித்திப்பெற்ற தலமாகும். இதேபோன்று படவேடு ஊராட்சியில் உள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில். வந்தவாசி வட்டம். தென்னாங்கூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில், செய்யாரில் உள்ள அருள்மிகு வேதபுரிஸ்வரர் திருக்கோயில், திருமலை ஊராட்சியில் உள்ள சமணர் ஆலயம், மாமண்டூரில் உள்ள குடைவரைக்கோயில், ஜவ்வாதுமலை போன்று பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. திருவண்ணாமலை, சுற்றுலா பகுதி என்பதால் சுற்றுலா பகுதிகளுக்கு என்று சிறப்பு வாகனங்கள் மக்கள் செல்ல ஏற்பாடு செய்யவும், சுற்றுலா தளங்களை மட்டும் இணைக்கிற பகுதிகளுக்கு வாகனம் செல்ல இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறை மூலம் தயார் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் இத்தகைய வசதி ஏற்படுத்தப்படும். பருவதமலையை பொறுத்தவரையில் மார்கழி 1 அன்று சிறப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. ஏராளமான ஆன்மீக பக்தர்கள் 26 கிலோமீட்டர் நீளம் கொண்ட பருவதமலை கிரிவலப்பாதையை சுற்றி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, இரவு நேரங்களில் மின்விளக்குகள், காவல்துறையின் மூலம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி, போக்குவரத்து துறையின் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். ப
ருவதமலை கிரிவலப்பாதை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். பருவதமலை கிரிவலப்பாதையை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தோம். தற்போது உடனடியாக செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். வருங்காலங்களில் பக்தர்கள் அதிக அளவு வரும்வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆன்மீக சுற்றுலா தளமாக மேம்படுத்தப்பட்டு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பேசினார்.
முன்னதாக மார்கழி மாதம் பிறப்பு முன்னிட்டு பருவதமலை கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்து மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின் போது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி.கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், மண்டல இணை ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை சுதர்ஷன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் ம.தனலட்சுமி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கே.வி. சேகரன், கலசபாக்கம் ஒன்றிய குழுத்தலைவர் அன்பரசி ராஜசேகரன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.