குமரியில் இடி - மின்னலுடன் திடீர் மழை

கொளுத்தும் கோடை வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் குமரி மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2024-04-12 08:10 GMT
நாகர்கோவிலில் இன்று திடீர் மழை பெய்ததால் குடை பிடித்தபடி செல்லும் மாணவிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில மாதங்களாக  சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதனால் மக்கள் தவிப்பிற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட சில  பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஆனால் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து வெயில் அடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.      இந்த நிலையில் நேற்று இரவு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

இன்று அதிகாலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. அதன் பிறகு காலை 9 மணி முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாகவே காணப்பட்டது. அதன் பிறகு இடி மின்னலுடன் கொட்டிய மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. கொட்டாரம், சாமிதோப்பு, சுசீந்திரம், குளச்சல், குழித்துறை, தக்கலை, மார்த்தாண்டம், தடிக்காரன்கோணம், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News