கோடை கால பயிர்களை பயிரிடலாம் கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் வேர்க்கடலை, எள், உளுந்து போன்ற கோடை கால பயிர்களை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை பருவத்தில், உளுந்து, எள், வேர்க்கடலை போன்ற பயிர்களை, சாகுபடி செய்வதற்கான கோடை சாகுபடி திட்டம், வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், எள், உளுந்து, பாசிப்பயறு, வேர்க்கடலை போன்ற, குறைந்த கால பயிர்களை கோடையில் சாகுபடி செய்வதற்கு முன், உழவு செய்ய விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உழவு செய்வதால், நிலத்தில் உள்ள பூச்சி, களை, தீமை செய்யும் புழுக்கள் பறவைகளுக்கு இரையாகி அழிந்துவிடும். கோடை மழை பெய்யும்போது, மழைநீர் தேங்கி, மண்ணுக்கு அடியில் காற்று புகுந்து இலகுவாகி எப்போதும் ஈரப்பதம் இருக்கும். வேர்கள் மண்ணில் பரவி செழிப்பாக வளரும். எனவே, திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் ஆதாரம் உள்ள விவசாயிகள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் வேர்க்கடலை, எள், உளுந்து போன்ற கோடை கால பயிர்களை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.