தாளவாடியை குளிர்வித்த கோடை மழை
தாளவாடியில் நேற்று மாலை காற்றுடன் பெய்த கோடை மழையால் இதமான சூழல் நிலவியது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே மாவட்டத்தில் 108 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் அரசும் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என கூறி வருகிறது. அந்த அளவிற்கு அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் சத்தி புலிகள் காப்பகம் வனப் பகுதிகளில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. வனவிலங்குகள் குடிநீர் ஆதாரமாக உள்ள தடுப்பணைகள், குட்டைகள் தண்ணீர் இல்லை, வனத்துறையினர் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்து சென்று வனக் குட்டைகளை நிரப்பி வருகின்றனர். தாளவாடி மலைப்பகுதியில் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. நேற்று மாலையில் தாளவாடி சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. காற்றுடன் மழை பெய்ததால் தாளவாடியில் இதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது . பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பட விளக்கம் தாளவாடியில் காற்றுடன் பெய்யும் மழை