பழங்குடியின மக்களுக்கு வேளாண் உபகரணங்கள் - இராஜேஸ்குமார் எம்.பி வழங்கல்
பழங்குடியின மக்களுக்கு வழங்கப் பெற்ற வேளாண் உபகரணங்கள் - இராஜேஸ்குமார் எம்.பி வழங்கி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 27.12.2023 அன்று சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 194 கோடி ரூபாய் மதிப்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதியம், பழங்குடியினருக்கான வாழ்வாதார திட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கான தொழில் முனைவு சமூக, பொருளாதார திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ் கடனுதவிகள், பழங்குடியினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வீடுகள் வழங்குதல், உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகை. கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இவ்விழாவில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், எடப்புளிநாடு பூர்வமலை மலையாளி விவசாய மேம்பாட்டு சங்கத்திற்கு ரூ.21.84 இலட்சம் மதிப்பீட்டில் பழங்குடியினர் மக்கள் விவசாயம் செய்வதற்கு வழங்கப்பட்ட வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மேற்படி வழங்கப்பட்ட டிரேக்டர், டில்லர், ரோட்டவேட்டர், தெளிப்பான் உள்ளிட்ட வேளாண் உபகரணங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு, பழங்குடியின விவசாய பெருமக்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சிவக்குமார், வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கணேசன், வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் முருகேசன், பழங்குடியின நல திட்ட அலுவலர் பீட்டர் ஞான ராஜ், அட்மா குழுத்தலைவர் அசோக் குமார் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.