மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு : மக்கள் விடுதலை முடிவு

தஞ்சாவூரில் கம்யூனிஸ்ட் கட்சி மா.லெ கூட்டம் நடைபெற்றது

Update: 2024-02-17 11:36 GMT
கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் விடுதலை கட்சியின் கூட்டம்
வருகிற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள் விடுதலை முடிவு செய்துள்ளது என்றார் அக்கட்சியின் தலைவர் ஜெ. சிதம்பரநாதன். தஞ்சாவூரில் இக்கட்சியின் இரு நாள் மாநாடு சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு கட்சியின் தலைவர் ஜெ.சிதம்பரநாதன் தலைமை வகித்து, செய்தியாளர்களிடம் தெரிவித்தது: இந்தியாவில் பாசிசத்தை கட்டமைப்பதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். சுரண்டலை உறுதிப்படுத்துவதற்காக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட ஒற்றை கலாசாரத்தை புகுத்தும் முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது. அனைத்து விஷயங்களிலும் பாஜகவினர் ஒற்றை தளத்தை நோக்கிச் செல்கிறது. பெரும் பணக்காரர்களுக்கான முதலாளித்துவக் கொள்கைகளைக் கடைப்பிடித்து, அம்பானி, அதானியை ஆதரித்து, மக்கள் பணத்தை பாஜக கொள்ளையடித்து வருகிறது. இந்த ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பதற்காக வருகிற மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட முறையை மக்கள் விடுதலை வன்மையாகக் கண்டிக்கிறது. சாதி பிரிவினையை தூண்டும் வகையில் பாஜகவினரும், ஆளுநரும் செயல்படுகின்றனர்.  பாஜக விஷயத்தில் திமுக அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதால், மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. எனவே, திமுக அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அனைவருக்கும் அறிவியல், விவசாயத்துக்கு முன்னுரிமை, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது, சிறு, குறு, குடிசைத் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, சோஷலிச சமுதாயத்தை மலரச் செய்வது போன்றவற்றை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் சிதம்பரநாதன். கட்சியின் பொதுச் செயலர் கசி.விடுதலைக்குமரன், கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் மு. திருமாவளவன், மாவட்டச் செயலர் இரா. அருணாசலம், நிர்வாகிகள் துரை.மதிவாணன், தே. ராமர், மு.கருணாகரன், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News