காரியப்பட்டியில் ஆட்சியர் ஆய்வு
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், எஸ்.கல்லுப்பட்டி ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.13.65 ஐலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், எஸ்.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.9.21 இலட்சம் மதிப்பில் புரணமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து, கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், குரண்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.97 இலட்சம் மதிப்பில் வெள்ளையத்தேவன் ஊரணி தூர்வாரப்பட்டுள்ள பணிகளையும், ரூ.5.90 இலட்சம் மதிப்பில் பள்ளியில் மாணவிகளுக்கான சுகாதார வளாக கட்டப்பட்டு வருவதையும், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.73.79 இலட்சம் மதிப்பில் குரண்டி-மேலகள்ளன்குளம் சாலை பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளையும் விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
பின்னர், முஷ்டகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்து விதமான நோய்கள், தொற்றா நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து கேட்டறிந்து, உயர்சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கிடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்களை அறிவுறுத்தினார்.