வங்கி அலுவலர் போல் பேசி, வழக்குரைஞரிடம் பணம் மோசடி
வங்கி அலுவலர் போல் பேசி வழக்குரைஞரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 11:05 GMT
தஞ்சாவூரில் வங்கி அலுவலர் போன்று பேசி வழக்குரைஞரிடம் ரூ. 3.09 லட்சம் மோசடி செய்த மர்ம நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்குரைஞரின் கைப்பேசிக்கு பிப்ரவரி 21 ஆம் தேதி அழைப்பு வந்தது. அதில், பேசிய மர்ம நபர், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் நுகர்வோர் சேவைப் பிரிவு அலுவலர் என்றும், தங்களது கே.ஒய்.சி.யை புதுப்பிக்க வேண்டும் என்றும், ஓ.டி.பி. எண்ணை தருமாறும் கூறினார். இதை நம்பிய வழக்குரைஞர் ஓ.டி.பி. எண்ணைக் கூறினார். இதைத்தொடர்ந்து, வழக்குரைஞரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 3.09 லட்சம் இணையவழி மூலம் திருடப்பட்டது. இது குறித்து தஞ்சாவூர் இணையதளக் குற்றப் பிரிவில் வழக்குரைஞர் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.