தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வு - பேராவூரணி மாணவிகள் 4 பேர் தேர்ச்சி 

Update: 2023-12-07 05:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு அரசு  நடத்திய தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வில் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 4   மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு கடந்தாண்டு முதல் தமிழக அரசால் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.  கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்த தேர்வில் தமிழகம்  முழுவதும் இருந்து  2,20,880 பேர் தேர்வு எழுதினர்.  தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகள் ரமாதேவி, சரஸ்வதி, பிரியதர்ஷினி, தமிழ்ச்செல்வி ஆகிய 4 மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.  இதில் ரமாதேவி ,பிரியதர்ஷினி ஆகிய இரண்டு மாணவிகளும் முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று மாதம் ரூ.1000 ம் ஊக்கத்தொகை பெற தகுதிபெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News