தார் சாலை அமைக்கும் பணி: விரைவில் முடிக்ககோரி போராட்டம்
திருப்பூரில் தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-04-29 14:01 GMT
திருப்பூரில் தார் சாலை அமைக்கும் பணியை இரண்டு மாதகாலமாக நிறுத்தி வைத்துள்ளதால் 9 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 59 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பூந்தோட்டம் , வள்ளலார் அவன்யூ உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில் 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். முத்தனம் பாளையம் - விஜயாபுரம் இணைப்பு சாலை போடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக டெண்டர் விடப்பட்ட நிலையிலும் இன்னும் பணிகள் தொடங்காததன் காரணமாக பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் , பணிக்கு செல்லும் பொதுமக்கள் என ஏராளமானார் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் , சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள நிலையில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட மிகப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக காலம் தாழ்த்தாமல் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர் இதனால் மண்டல அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.