கோரிக்கை விடுத்த பொதுமக்கள் - மூடப்பட்ட டாஸ்மாக் கடை

திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அந்த கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

Update: 2024-05-17 09:30 GMT

மூடப்பட்ட டாஸ்மாக் கடை 

திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையில், மாமல்லபுரம் சாலை, செங்கல்பட்டு சாலை, கேளம்பாக்கம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் இணைகின்றன. சுற்றுவட்டார கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள், வெளிமாவட்ட பயணியர் என, ஏராளமானோர் திருப்போரூரை கடந்து செல்கின்றனர். திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே, ஓ.எம்.ஆர்., சாலையையொட்டி, 100 மீட்டர் இடைவெளியில், அடுத்தடுத்து முன்று டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இந்நிலையில், தமிழகத்தில், 500 டாஸ்மாக் கடைகளை மூட, தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் விளைவாக, திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையில், அடுத்தடுத்து இயங்கிய மூன்று டாஸ்மாக் கடைகளில், போலீஸ் குடியிருப்பு மற்றும் பேருந்து நிலையம் அருகே இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகள் மட்டும் மூடப்பட்டன. ஆனால், பள்ளி மாணவ -- மாணவியர், பெண்கள் உட்பட அனைவருக்கும் இடையூறாக, ரவுண்டானா அருகே இருந்த டாஸ்மாக் கடை மூடப்படவில்லை. இந்த கடையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்களினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இவ்வாறு, பிரச்னைக்குரிய ரவுண்டானா அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை மூடாமல், மற்ற இரண்டு கடைகளைப் பூட்டி, பெயரளவில் நடவடிக்கை எடுத்துள்ளது என, மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. மாணவர்கள், பெண்கள் அதிகளவில் கடந்து செல்லும் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி, மக்கள் நீண்ட நாட்களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை, இரண்டு நாட்களுக்கு முன் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இன்றி அமைதியாகக் காணப்பட்டது. பொதுமக்கள், தன்னார்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News