ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் 8 லட்சம் ரூபாய் இழந்த சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-06 08:59 GMT

பைல் படம் 

 மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளப் பகுதியில் இன்று அதிகாலை ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்ஓட்டுநர் மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவரது முகம் சிதைந்த நிலையில் இருந்துள்ளது.

மேலும், இறந்து கிடந்தவர் சிவப்பு சட்டை அணிந்திருந்ததால் அது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த சரவணன் (56) என்பதும், இவர் திருமங்கலம் விமான நிலைய சாலையில் உள்ள தனியார் CBSE பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததும், இவரது மனைவி திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததாகவும் தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகியதும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து ஆசிரியர் சரவணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது ரயிலில் வரும்போது தவறி விழுந்து இறந்தாரா, என்ற கோணத்தில் போலீசார் அவரது குடும்பத்தாரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில் அவர் பல நாட்களாக ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு 8 லட்சரூபாய் வரை இழந்ததால் மனவிரக்தியில் இருந்து வந்ததாகவும், இந்நிலையில் சரவணன் வீட்டில் இருந்த மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டை விட்டு வெளியே வந்த சரவணன் இன்று அதிகாலை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் போலீசார் விசாரணையில் கூறப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் ஆசிரியரே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து உயிரிழந்த சரவணன் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News