டோல்கேட் சர்வரில் தொழில்நுட்ப கோளாறு - கட்டண பிடித்தத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

மதுரை வண்டியூர் டோல்கேட்டில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டோல்கேட் கட்டணம் திடீரென வாகன உரிமையாளர்களின் வங்கியிலிருந்து எடுக்கப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து விசாரிக்க டோல்கேட் அலுவலகத்தில் வாகன ஓட்டிகள் குவிந்து வருகின்றனர்.

Update: 2024-06-27 07:47 GMT

மதுரை வண்டியூர் டோல்கேட்

தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் கீழ் மதுரை திருச்சி - தூத்துக்குடி செல்லும் பைபாஸ் சாலையில் அம்மா திடல் அருகேயுள்ள வண்டியூர் டோல்கேட் செயல்பட்டுவருகின்றது. இதனை பாலாஜி டோல்வேய்ஸ் என்ற நிறுவனம் மூலமாக கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது. இந்த டோல்கேட்டை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்த செல்கின்றது.

இந்த டோல்கேட்டிற்கு கார் போன்ற ரக வாகனங்களுக்கு இருமுறை செல்ல 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி முதல் தற்போது வரை டோல்கேட் நிறுவனத்தின் சாப்ட்வேர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வண்டியூர் டோல்கேட்டுகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு ஸ்கேன் செய்யப்பட்ட நிலையில் வாகன ஓட்டிகளின் வங்கிகளில் இருந்து பணம் வசூலிக்கப்படவில்லை. இந்நிலையில் திடீரென நேற்று காலை முதல் கடந்த 4ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வண்டியூர் டோல்கேட்டை கடந்த வாகனங்களின் உரிமையாளர் வங்கிகளில் இருந்து கட்டணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது.

கடந்த 15 நாட்களில் டோல்கேட்டை பயன்படுத்தியதற்காக ஒரே நேரத்தில் கட்டணத்தை இன்றைய தேதியை குறிப்பிட்டு வங்கியில் இருந்து எடுப்பதால் பதட்டமடைந்த வாகன ஓட்டிகள் டோல்கேட் அலுவலகத்தில் குவிந்துவருகின்றனர். தங்களது வாகனங்கள் வேறு இடங்களில் உள்ள நிலையில் இன்றைய தேதியிட்டு வண்டியூர் டோல்கேட்டை கடந்து சென்றதற்கான கட்டணம் என கூறி குறுஞ்செய்தி அனுப்பவதால் பதட்டமடைந்தனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கேட்டபோது தற்போது வரை தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படாத நிலையில் வாகனங்கள் கடந்து செல்வதற்கான கட்டணம் வசூலிக்கப்படாமல் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்த பின்பாக வசூலிக்கப்படும் என்ற அடிப்படையில் வாகனம் கடந்து சென்றதற்கான தொகைகள் மட்டுமே எடுப்பதாகவும், 4ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டோல்கேட்டை பயன்படுத்தியவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாக ஊழியர்கள் தெரிவித்துவருகின்றனர்.

மாநிலத் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள டோல்கேட்டில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அதனை சரி செய்யாத நிலையில் நாள்தோறும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதோடு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதால் குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பேசிய வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்கள் கடந்த 15 நாட்களில் ஒரு முறை மட்டுமே சென்ற நிலையில் இரண்டு மூன்று தடவை சென்றது போல கட்டணம் திடீரென வங்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர் மேலும் டோல்கட்டில் இதுபோன்று தொழில்நுட்பக் கோளாறு இருப்பது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென தங்களது வங்கிகளில் இருந்து கட்டணத்தை எடுப்பது குழப்பத்திற்கு ஆளாக்குகிறது எனவும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்

Tags:    

Similar News