இளம்பெண் தற்கொலை - மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
தூத்துக்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில், அவரை தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2023-11-16 05:21 GMT
தூத்துக்குடி சிலுவைப்பட்டி சுனாமி காலனியைச் சேர்ந்தவர் அபிராமி (24). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அபிராமி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தன்னுடையை புகைப்படத்தை ஒருவர் இணையதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி வருவதால், தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து அபிராமியை தற்கொலைக்கு தூண்டியவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் கூலி தொழிலாளி பத்மநாபன் (35), அபிராமியை மிரட்டியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பத்மநாபன் அடிக்கடி தனது செல்போனில் இருந்து ஏதாவது ஒரு செல்போன் எண்ணை டைப் செய்து அழைத்து பேசுவாராம். அப்போது ஆண்கள் பேசினால், தவறான எண்ணுக்கு அழைத்து விட்டதாக கூறி துண்டித்து விடுவாராம். பெண்கள் பேசினால், அவர்களிடம் நைசாக ஆசையாக பேசி பழகுவாராம். அதன்பிறகு அவர்களின் புகைப்படங்களையும் பெற்றுக்கொண்டு, அதனை வைத்து மிரட்டி வந்ததும், அதேபோன்று அபிராமியின் செல்போன் எண்ணையும் தொடர்பு கொண்டு பேசி, மிரட்டி இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மநாபனை கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்த அபிராமியின் உடலை உறவினர்கள் வாங்கி சென்று அடக்கம் செய்தனர்.