குமரியில் நள்ளிரவில் கோவில் கோபுர கும்ப கலசத்தை உடைத்து திருட்டு

குமரியில் நள்ளிரவில் கோவில் கோபுர கும்ப கலசத்தை உடைத்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2024-05-19 12:09 GMT

உடைக்கப்பட்ட கலசம்

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் சமேத காசி விசாலாட்சி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். 

       இந்த கோவிலில் அர்ச்சகராக ஸ்ரீதர் போற்றி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பிறகு நேற்று அதிகாலை அவர் கோவிலை திறப்பதற்காக வந்தார்.

அப்போது கோவில் மூலஸ்தானத்தின் மேல் உள்ள விமான கோபுர கும்ப கலசம் கீழே உடைந்து கிடந்தது. கும்ப கலசத்தில் உள்ள செம்பு கலசம் திருடப்பட்டு இருந்தது. யாரோ மர்ம நபர்கள் அந்த கோபுர கும்ப கலசத்தை உடைத்து திருடி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்திடம்  தெரிவித்தார். அவர் கோவில் கலசம் உடைக்கப்பட்டு இருந்ததை பார்வையிட்டார்.

இதுகுறித்து அர்ச்சகர் ஸ்ரீதர் போற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.        

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விமான கோபுரம் கும்ப கலசம் உடைந்து கிடந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி பகுதியில் நள்ளிரவு கோபுர கும்ப கலசத்தை உடைத்து திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News