கோவில் கும்பாபிஷேகம் - அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸார் குவிப்பு

இருதரப்பு பிரச்னையால்கீழ்குந்தா ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-07-01 06:28 GMT

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கீழ்குந்தாவில் காடெஹெத்தையம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் 'தெவ்வஹப்பா' என்று அழைக்கப்படும் அறுவடை பண்டிகை நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் குந்தை சீமைக்கு உட்பட்ட 14 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்துவது வழக்கம்.

கடந்த 10 ஆண்டுகளாக கோவில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பிரச்னை முடிந்து, வழக்கம்போல் திருவிழா கொண்டாடப்பட வேண்டுமென சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில் கோவில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. எனவே பணிகளை முழுமையாக முடித்து வேறு ஒரு தேதியில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திட்டமிட்ட தேதியில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. எனவே ஒரு தரப்பினர் உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து ஊட்டி ஊரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயலட்சுமி தலைமையிலான போலீஸார் அதிருப்தி தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளனர். இருந்தாலும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ் குந்தாவில் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்த மறுநாள் கோவில் திருவிழாவை நடத்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

Tags:    

Similar News