ராசிபுரத்தில் கோவில் மரம் வெட்டிய விவகாரம்: பேச்சுவார்த்தை
ராசிபுரம் ஸ்ரீபொன் வரதராஜ பெருமாள் கோயிலில் வெட்டப்பட்ட மரங்கள் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ராசிபுரம் ஸ்ரீபொன் வரதராஜ பெருமாள் கோயிலில் வெட்டப்பட்ட மரங்கள் தொடர்பாக மக்கள் தன்னுரிமை கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்துதாக அறிவித்திருந்த நிலையில் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பணி புரனரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள அத்திமரம் வெட்டப்பட்டது.
இதனையடுத்து உரிய அனுமதியில்லாமல் அத்திமரம் மேலும் கோவில் முன்பாக உள்ள வன்னிமரம் கிளைகள் போன்றவை வெட்டப்பட்டதையடுத்து வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர். மேலும் பிப்.5-ல் வெட்டப்பட்ட மரங்களுக்கு புனித நீர் ஊற்றும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், ராசிபுரம் டிஎஸ்பி., எம்.விஜயகுமார், காவல் ஆய்வாளர் கே.செல்வராஜ் ஆகியோர் மக்கள்தன்னுரிமை கட்சி நிறுவனர் நல்வினை செல்வன் உள்ளிட்டோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
மரம் வெட்டப்பட்டது தொடர்பாக கோவில் நிர்வாக அலுவலரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடுவதாக போராட்டம் செய்ய முயன்றவர்கள் தெரிவித்தனர்.