பட்டதாரிகளுக்கு ஜவுளி தொழில் பயிற்சி
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 6 மாத கால ஜவுளி தொழில்பயிற்சி நேற்று துவங்கியது.
கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் ஜவுளி தொழில் தொடர்பான பயிற்சி சங்க அலுவலக கூட்டரங்கில் துவங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவரும், அட்லஸ் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவருமான நாச்சிமுத்து ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் சுகுமார், பொருளாளர் அசோக் ராம்குமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், பயிற்சி மேற்கொள்ள வந்த பட்டதாரிகள், பயிற்சியாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
6- மாதத்திற்கு ஜவுளி தொழிலில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நாள் ஒன்றுக்கு நாலு மணி நேரம் திங்கள் முதல் சனி வரை பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிகள் ஜவுளி தொழிலில் முக்கிய பொருளான, பஞ்சை பயன்படுத்தி, அதனை மதிப்பு கூட்டி, பல்வேறு ஆடைகளை தயாரித்து, ஏற்றுமதி செய்யும் அளவிற்கான அனைத்து விதமான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இது போன்ற பயிற்சிகள், கரூர் மாவட்டத்தில் முதன்முதலாக இன்று துவக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆறு மாதம் வரை இந்த பயிற்சிகள் வழங்கப்படும் என இந்த பயிற்சி வகுப்பு நடத்தும் தலைமை நிர்வாக அலுவலர் சங்கரலிங்கம் தெரிவித்தார்.