மாதம் தோறும் ரூ.3000 மத்திய அரசு வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
அனைத்து குடும்பத்திற்கும் மாதம் தோறும் ரூ.3000 மத்திய அரசு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து பெரம்பலூர் மேற்கு வானொலி திடல் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது பேசிய அவர், உங்களுக்காக ஓடோடி வந்து உழைக்கக் கூடியவர் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன்.
பெரம்பலூர் மாவட்டம், விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நிறைந்த மாவட்டம். உங்களுக்காக ஓடோடி வந்து இவர்களுக்காக உழைக்கக்கூடிய நமது வேட்பாளருக்கு வாக்களியுங்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த திட்டமும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில், கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் ஏழை மக்களுக்காக கொண்டுவரப்பட்டது. இந்த அம்மா மினி கிளினிக்கில் மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர் இருந்தனர். இதன் மூலம் ஏழை மக்கள் பயன் பெற்று வந்தனர்.
திமுக அரசு இந்த திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு அம்மா சிமெண்ட் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டத்தையும் ஸ்டாலின் நிறுத்திவிட்டார். எண்ணெய், சர்க்கரை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விலை உயர்ந்து விட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். திமுக ஆட்சி அமைத்ததிலிருந்து கொள்ளை, வழிப்பறி, திருட்டு நடைபெற்று சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.
இதனால் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை. நம் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது. சட்ட மன்ற தேர்தலின் பொது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தைக் கூட நாங்கள் போராடிய பிறகு தான் கொடுத்தார்கள். அதுவும் 27 மாதங்கள் கழித்து தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்கும் மத்திய அரசு ஏழை எளிய குடும்பங்களுக்கு மாதம் ரூ.3000 வழங்க வேண்டும். . இதற்காக உங்கள் வேட்பாளர் சந்திரமோகன் போராடுவார். தமிழகத்தில் வீட்டு வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியும் உயர்ந்துவிட்டது. வரிமேல் வரி போட்டு மக்களை வதைக்கிறார்கள்.
இதை மாற்ற அதிமுக வேட்பாளர் .சந்திரமுகனுக்கு வாக்களியுங்கள். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று பேசினார். இந்நிகழ்ச்சியின் போது அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.