ஆசிரியையிடம் செயின் பறிப்பு - விபத்தில் சிக்கிய வழிப்பறி ஆசாமிகள்!

புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 7 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்ற இருவர் கீரனூர் அருகே விபத்துக்குள்ளாகி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2024-04-26 04:55 GMT

வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர்

புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 7 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்ற இருவர் கீரனூர் அருகே விபத்துக்குள்ளாகி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியைச் சேர்ந்த கலைவாணி - ரவிச்சந்திரன் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களது மகனும் மகளும் பெருமாநாடு வைரம் பப்ளிக் பள்ளியில் படித்து வரும் நிலையில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கலைவாணி தனது தந்தை பழனியப்பன் உடன் மகன் மகளை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அப்போது அன்னவாசல் விளக்கு அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டிருந்தபோது, அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் உணவு வாங்கிக் கொண்டு பின் தொடர்ந்து உள்ளனர். இரவு 9:10 மணிக்கு கலைவாணியின் தந்தை பழனியப்பன் இருசக்கர வாகனத்தை ஓட்டியபோது கலைவாணி மகன் மகளுடன் பின்னால் அமர்ந்தவாறு பயணம் செய்துள்ளார்.

அப்போது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து கட்டியாவயல் இறங்கிய போது பல்சர் இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்த இரு நபர்களில் பின்னால் இருந்த நபர் கலைவாணியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் செயினை அறுத்துக் கொண்டு இருவரும் தப்பியுள்ளனர். இதில் கலைவாணி சுதாரித்து கொள்வதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாயினர்.

இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழிப்பறி தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் இருசக்கர வாகனத்தில் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிய இருவரும் கீரனூர் அருகே குளத்தூரில் விபத்தில் சிக்கினர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கீரனூர் போலீசார் இருவரையும் மீட்டு விசாரித்ததில் கட்டியாவயல் பகுதியில் செயின் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பதும், அவர்களிடம் இருந்த ஏழு சவரன் தங்கச் தாலி செயினையும் போலீசார் மீட்டனர்.

இருவரும் காயம் அடைந்த நிலையில் போலீசார் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் உதவியோடு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், போலீஸ்சார் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம் தண்டைக்காரன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (21), தஞ்சாவூர் மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே கள்ளர் தெருவை சேர்ந்த கொடியரசன் (31) என்பதும் தெரியவந்தது. ஏற்கனவே விக்னேஷ் மீது மூன்று ஏடிஎம் திருட்டு வழக்கு, இரண்டு வழிப்பறி என ஐந்து வழக்குகள் உள்ளது.

கொடியரசன் மீது மூன்று கொலை வழக்குகளும் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டு நண்பர்களானதும், மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியில் வந்த இருவரும் அடிக்கடி சந்தித்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை கொடியரசன், விக்னேஷை தொடர்பு கொண்டு தஞ்சாவூருக்கு வரும்படி அழைத்துள்ளார். பின்னர் இருவரும் தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை வழியாக மணப்பாறை சென்றுள்ளனர். அங்கிருந்து மீண்டும் புதுக்கோட்டை வழியாக வந்து கொண்டிருந்தபோது கட்டியாவயல் தேசிய நெடுஞ்சாலையில் செயின் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதில் கொடியரசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆறு தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயங்களுடன் விக்னேஷும் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கை நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராகவி விசாரணை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிச் சென்றபோது விபத்துக்குள்ளாகி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News