பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர் !
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 295 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில் குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-04 12:16 GMT
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (04.03.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 295 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 295 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தலா 8 கிராம் வீதம் ரூ.7.50 இலட்சம் மதிப்பிலான தங்க நாணயமும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சுய தொழில் தொடங்க திருநங்கை ஒருவருக்கு ரூ.50,000/-க்கான காசோலையினையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 3 திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.