சுய உதவி குழுவின் பல்பொருள் விற்பனை அங்காடியினை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்
சுய உதவி குழுவின் பல்பொருள் விற்பனை அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பந்தல்குடி, பெரியநாயகிபுரம் மற்றும் கட்டங்குடி ஆகிய இடங்களில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள விற்பனை அங்காடிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி ஊராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஓம்சக்தி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்பொருள் அங்காடியினையும், ஸ்ரீ காளியம்மன் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினரால் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட உணவகத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து, பெரியநாயகிபுரம் ஊராட்சி வாழ்வாங்கி கிராமத்தில் அப்துல்கலாம் மகளிர் சுய உதவிக்குழுவின் மாற்றுத்திறனாளி உறுப்பினரால் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட பல்பொருள் விற்பனை அங்காடியினையும், கட்டங்குடி ஊராட்சியில் உள்ள பூவாழவந்தம்மன் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரால் வட்டார வணிக வள மையத்தின் முன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவகத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து அருப்புக்கோட்டை வட்டார வணிக வள மையத்தின் மூலம் குல்லூர்சந்தை ஊராட்சியில் உள்ள புதிய தொழில்முனைவோர்களான காளியம்மன் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் வளர்நிலா மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 2 நபர்களுக்கு தலா ரூ.50000/- வீதம் ரூ.1,00,000/-க்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர், கோவிலாங்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு நடைபெற்ற பண்ணை சார்ந்த திட்டங்களுக்கான உணர்திறன் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து கலந்துரையாடினார். .