வாய்க்கால்கள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

மருதையாற்றின் குறுக்கே அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கான பிரதான வாய்க்கால்கள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-10-27 08:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்துார் வட்டம் கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கான முதன்மை வாய்க்கால் அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிலிமிசை பகுதியில் முதன்மை வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இங்கு பயன்பாட்டில் உள்ள சாலையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து கீழே வாய்க்கால் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் தற்போதைக்கு பாலம் அமையவுள்ள இடத்தை கடந்து செல்ல அருகில் உள்ள வயலில் சிறு பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக வயலின் உரிமையாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடியாகப் பேசி ஒப்புதல் பெற்றார். அப்போது, வயலில் பயிர் இல்லாத இடங்களில் சாலை அமைக்க வேண்டும் என்றும், பயிர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், பாலப்பணிகள் நடைபெறும் போது தற்காலிக சாலை வழியாக கால்நடைகள் வயலுக்குள் செல்லாமல் இருக்கும் வகையில் முறையாக கம்பிவேலி அமைத்திட வேண்டும் எனவும் நீர்வளத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் கொட்டரை நீர்த்தேக்கத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். 95% பணிகள் முடிவுற்ற நிலையில், எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து நீர்த்தேக்கம் டிசம்பர் 2023 -க்குள் இந்த பருவ ஆண்டில் மக்களின் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் நீர்வளத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி பொறியாளர் சரவணன், ஆலத்துார் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News