வறண்டு கிடக்கும் கொளத்துார் ஏரி விவசாயிகள் வேதனை
வறண்டு கிடக்கும் கொளத்துார் ஏரி விவசாயிகள் வேதனை
Update: 2024-06-25 04:55 GMT
பள்ளிப்பட்டு ஒன்றியம், கொளத்துார் கிராமத்தின் கிழக்கு, வடக்கு என இரண்டு திசைகளில் மலைகள் அமைந்துள்ளன. தெற்கில் கொசஸ்தலை ஆறு பாய்கிறது. இதில், வடக்கில் உள்ள மலைப்பகுதியில் இருந்து ஏரிக்கு நீர்வரத்து உள்ளது. இந்த ஏரி பாசனத்தால், 500 ஏக்கர் விவசாய நிலம் பயனடைந்து வருகிறது. கொளத்துார், நெடியம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இந்த ஏரி பாசனத்தை நம்பி, நெல் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஏரியில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனால், அடுத்த பருவத்திற்கான சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த ஏரியின் மதகுகளை அடைத்து தண்ணீரை தேக்கி வைத்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. கடந்த டிசம்பரில் நிரம்பிய ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால், தற்போது ஏரி வறண்டு கிடக்கிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. 10 அடி ஆழத்தில் இருந்து நிலத்தடி நீர்மட்டம் தற்போது நெடியம் அடுத்த சொரக்காய்பேட்டை பகுதியில், 20 அடி வரை சென்றுள்ளது. வரும் மழைக்காலத்திற்கு முன்பாக ஏரி மதகை அடைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.