தொழிற்சாலை வளாகத்தில் பற்றிய தீயால் பரபரப்பு
சிட்கோ தொழிற்சாலை வளாகத்தில் பற்றிய தீயை தீயணைப்புத்துறையினர் போராடி அனைத்தனர்.
திருப்போரூர் அடுத்த ஆலத்துாரில், சிட்கோ தொழிற்பேட்டை 1982ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இங்கு, 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில், 10,000த்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த சிட்கோ வளாகத்தில், 4 ஏக்கர் பரப்பில் தனியார் தொழிற்ச்சாலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, இந்த தொழிற்சாலை செயல்படவில்லை. இந்த தொழிற்சாலை வளாகத்தில், 40 சதவீத இடத்தில் கட்டடங்களும், 60 சதவீத இடம் காலியாகவும் விடப்பட்டுள்ளது.
காலியாக உள்ள இடம் முழுதும் பாராமரிப்பின்றி, முட்செடிகள், கோரைப்புற்கள் வளர்ந்து புதர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று அங்கு திடீரென தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது, காற்றும் பலமாக வீசியதால், வேகமாக தீ பரவி, சிட்கோ வளாகம் மற்றும் அருகே உள்ள பகுதிகள் முழுதும் புகைமூட்டம் காணப்பட்டது. உடனே, ஆலத்துார் மின் வாரியத்தினர் மின்சாரத்தை துண்டித்தனர். தகவல் அறிந்த திருப்போரூர், மாமல்லபுரம் தீயணைப்பு படையினர், விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முய்ற்சித்தனர்.
அருகே உள்ள தொழிற்சாலைகளிலிருந்தும் ஊழியர்கள், பொதுமக்கள் தண்ணீர் தெளித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தால், சிட்கோ முழுதும் கெமிக்கல், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருப்பதால், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.