சொத்து தகராறில் வீட்டை சூறையாடிய கும்பல்

லால்குடி அருகே சொத்து தகராறில் கும்பல் சேர்த்து கொண்டு வந்து அத்தையின் வீட்டை அடித்து நொறுக்கிய சகோதரன் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.;

Update: 2024-03-04 02:53 GMT

வழக்குப்பதிவு 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துறை நகர் சாலையில் வசித்து வருபவர் மும்தாஜ் பேகம் (70). அதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது அண்ணன் அப்துல் முத்தலிப் மகன் யூசுப் (40). மும்தாஜ் பேகம் மாந்துறை சிவன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கோயில் நிர்வாகத்திற்கு வாடகை கொடுத்து வசித்து வருகிறார். மும்தாஜ் பேகம் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள காலி நிலம் தொடர்பாக மும்தாஜ் பேகத்திற்கும்,அவரது அண்ணன் மகன் யூசுப்பிற்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

Advertisement

இரண்டு தரப்பினருக்கும் காலி நிலம் தொடர்பான வழக்கு லால்குடி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் 1 ந்தேதி மதியம் 3.30 மணியளவில் யூசுப் தன் மகன் அப்சல் (18) மற்றும் நண்பர்கள் கொண்ட கும்பல் மும்தாஜ் வீட்டிற்கு சென்று நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை வாபஸ் பெறச்செல்லி அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்தும் வீட்டின் கதவை உடைத்து நாசம் செய்தததுடன் மும்தாஜ்க்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.மேலும் மும்தாஜ் பேகத்தையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மும்தாஜ் பேகம் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து லால்குடி காவல்நிலையத்தில் மும்தாஜ்பேகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் யூசுப் மற்றும் அவரது மகன் அப்சல் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News