செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவர் மீட்பு

கரூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் மீட்கப்பட்டார்.

Update: 2023-12-25 12:39 GMT

கரூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் வயது 45.இவர் கரூரில் பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான நிலம் தொடர்பான பிரச்சனையில், கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இன்று காலை, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 80 அடி உயர செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல்துறையினருக்கும் அளித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் பெரியசாமி,

அன்சார் அலி, முகமது நவாஸ், சரவணக்குமார் ஆகிய 4 தீயணைப்பு வீரர்கள், செல்போன் கோபுரத்தில் ஏறி, அந்த நபரை ஏணி மற்றும் கயிறு மூலம் போராடி உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News