ஊரக வேலைத்திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடிய எம்.பி.,
கடம்பங்குறிச்சியில் 100 நாள் ஊரக வேலை பணியாளர்களுடன் கலந்துரையாடி, நிறை, குறைகளை கேட்டறிந்தார் எம்.பி. ஜோதிமணி.
கடம்பங்குறிச்சியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்திய எம்.பி. ஜோதிமணி. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடம்பங்குறிச்சி ஊராட்சியில் உள்ள வரப்பாளையம் பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து நேர்காணல் செய்தார். அப்போது, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பல வருடங்களாக எங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை தொடர்ந்து வழங்கி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக முறையாக வேலைக்கேற்ற ஊதியத்தை வழங்கப்படாமல் உள்ளது குறித்து கவலையுடன் தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, இது குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி, விரைவில் அவர்கள் ஊதியத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்வதாக தெரிவித்தார். மேலும், உடல்நலம் குன்றிய முதியவர்கள், தங்கள் உடல்நிலையை சீராக வைத்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார். மருத்துவ உதவி வேண்டுவோர் அலைபேசியில் தன்னுடைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு, தொடர்பு எண்ணை தேவை உள்ளோருக்கு வழங்கினார். அவ்வாறு தொடர்பு கொள்வோருக்கு, தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் கடம்பங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் லலிதா சுப்பிரமணி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.