திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கிய பஞ்சரத தேரோட்டம்

Update: 2023-11-23 06:47 GMT

தேரோட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பஞ்ச ரதங்களுக்கு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. முதலில், விநாயகர் தேர் காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. அந்த தேர், நிலைக்கு வந்து சேர்ந்ததும் முருகன் தேர் புறப்பட்டுச் சென்றது. மாடவீதியில் சுமார் 3 மணி நேரம் வலம் வந்த தேர் பின்னர் நிலையை அடைந்தது. அதன்பிறகு, உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு பெரிய தேர் புறப்பட்டது. மாட வீதியான தேரடி வீதி, திருவூடல் தெரு, கோபுர வீதி வழியாக பவனி வந்து, 7 மணி நேரத்துக்குப் பிறகு நிலையை சென்றடைந்தது.பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் தேரோட்டமும் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெற்றது. ஓரேநாளில், 5 தேர்கள் பவனி வருவது கூடுதல் சிறப்பாகும்.

மகா தேரோட்டத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேரோட்டத்தின்போது குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் சுமந்த பக்தர்கள், மாட வீதியை சுற்றி வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.மகா தேரோட்டம் நடைபெற்ற போது கனமழை பெய்தது. கொட்டும் மழையில் `அண்ணாமலையாருக்கு அரோகரா' என்று முழக்கமிட்டு ஒவ்வொரு தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து அண்ணா மலை கோயிலில் 25ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி (காடா துணி) ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாதீபம் ஏற்றப்படும் தீப கொப்பரைக்கு இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை 15க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழை மலைக்கு உச்சிக்கு எடுத்து சென்றனர். நாளை அதிகாலை தீபம் ஏற்றுவதற்கான நெய் மற்றும் திரி ஆகியவை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். உள்ளூர் விடுமுறை அண்ணாமலையார் கோவில் மகாதீப விழாவை முன்னிட்டு நவம்பர் 25-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அன்றைய தினம் தமிழகம் முழுவதிலும் இருந்தும் திருவண்ணாமலைக்கு 2400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News