தேர்தலை புறக்கணிப்பதாக மட்டிகைக்குறிச்சி மக்கள் முடிவு
கோமுகி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தரக்கோரி மட்டிகைக்குறிச்சி கிராமத்தில் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது மட்டிகைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தின் நடுவே கோமுகி ஆறு செல்கிறது. இதனால், மழைக்காலங்களில் நகர் பகுதிக்கு செல்ல பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் முறையான சாலை வசதி இன்றி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்கள் கிராமத்திற்கு ஓட்டு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடமும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.
ஆனால் தேர்தல் முடிந்த பிறகு வெற்றி பெறுவோர் இதனை கண்டு கொள்வதில்லை. இதனையடுத்து அப்பகுதி மக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த கிராமத்தில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள், வேட்பாளர்களின் பெயர்கள் போன்றவற்றை எழுதுவதற்கு அனுமதிக்காமல் தடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.