முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்
சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 15 காட்டு யானைகளை தேன்கனிகோட்டை அடர் வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் மீண்டும் சானமாவு பகுதியிலேயே முகாமிட்டிருப்பதால் வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 13 காட்டு யானைகள் நேற்று முன்தினம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்தது. ஏற்கனவே சானமாவு வனப்பகுதிக்குள் முகாமிட்டு சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகளும் 13 யானைகளோடு சேர்ந்து மொத்தமாக வனப்பகுதியில் 15 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன.
காட்டு யானைகளின் அச்சத்தால் கலக்கமடைந்த சானமாவு, பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கல், போடூர், ராமாபுரம், நாயக்கனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வாழும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த காட்டு யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் நேற்று இரவு ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் சானமாவு வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதி நோக்கி விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் கூட்டம் சானமாவு வனப்பகுதியில் இருந்து போடிச்சிப்பள்ளி கிராமம் வரை சென்று, சென்ற வேகத்தில் அப்படியே திரும்பி மீண்டும் சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்தது. தற்போது 15 காட்டு யானைகளும் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிவதால் வனப்பகுதி ஒட்டி வாழும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.