வருவாய்த்துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்றாம் நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்றாம் நாளாக நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப்பாதுகாப்பு அரசாணையினை வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில்கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் அல்லது தனி ஊதியம் வழங்க வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 3 ஆண்டுகளு்க்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அனைத்து தாலுகாவிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளைப் புறக்கணித்து 3-ஆம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சந்தனவேல் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ராகவேந்திர மூர்த்தி பிரவீன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சங்கர் கணேஷ், செயற்குழு உறுப்பினர் தமிழ்வாணன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சாவூர் மாவடத்தில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.