தண்ணீர் பாய்ச்ச சென்ற போது மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலி
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தண்ணீர் பாய்ச்ச சென்ற போது மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே பகடப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 57). இவர் பெரம்பலூர் மாவட்டம் காரியானூர் ஜெயந்தி காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு சுவேதா (40) என்ற மனைவியும், கோகுல் (24) என்ற மகனும், பிரியங்கா (20) என்ற மகளும் உள்ளனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் குணசேகரன் நேற்று காலை 9 மணிக்கு வெள்ளையூரில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மனைவி சுவேதாவுடன் சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள மின் மோட்டாரை இயக்க சென்ற போது அதில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. இதை பார்த்த அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மற்றொரு விவசாயி செந்தில், அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து குணசேகரனுடன், அவருடைய மனைவியும் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மனைவி கண் எதிரே குணசேகரன் பரிதாபமாக இறந்தார்.