சுந்தர வரதராஜர் கோவிலில் தெப்ப உற்சவம்
மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.
Update: 2024-02-19 07:29 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தர வரதராஜ பெருமாள் எழுந்தருளி, மாடவீதி வழியாக வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு வாண வேடிக்கையுடன் மேளம், தாளம் முழங்க வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.