கலவை சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு..
கலவை சார் பதிவாளர் அலுவலகத்தில் காலை முதல் இரவு வரை காத்திருந்து பத்திரப்பதிவு பண்ணாததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் தரையில் அமர்ந்து தர்ணா.
Update: 2024-02-17 06:30 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை சார்பதிவாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கயல்விழி, பதிவாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கலவை பகுதியைச் சேர்ந்த சுபன்சாய்பு, ஜெய் புனிஷா, குடும்பத்தினர். தனது குடும்ப சொத்தானது வாரிசு சான்று, இறப்புச் சான்று, உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை வைத்து பத்திரம் பதிவு செய்வதற்காக கடந்த இரண்டு நாடுகளுக்கு முன் சார்பதிவாளர் கயல்விழியிடம், பத்திர பதிவு செய்வது குறித்து கேட்டுள்ளனர். அப்போது பதிவாளர் வெள்ளிக்கிழமைபத்திர பதிவு செய்து கொள்ளுங்கள் நான் ஒரு நாள் விடுமுறையில் செல்வதாக உள்ளதால் பத்திர பதிவு செய்து கொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து கலவை பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பத்திரப்பதிவு செய்வதற்காக பத்திரம் தயார் செய்துள்ளனர். பத்திரம் பதிவு செய்வதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் செலுத்தி டோக்கன் போட்டுள்ளனர். காலை 10 மணியில் இருந்து காத்திருந்த குடும்பத்தினர். இரவு 7 மணி வரை பத்திரப்பதிவுக்கு அழைக்கவில்லை என சார் பதிவாளர் பொறுப்பு தாமோதரனிடம், கேட்டுள்ளனர். அப்போது சார் பதிவாளர் தாமோதரன், தாசில்தார் அலுவலகத்தில் வழங்கிய சான்றுகள் எனக்கு நம்பிக்கை இல்லை எனக்கூறி வருகின்ற திங்கட்கிழமை பத்திரப்பதிவு பண்ணுங்கள் என கூறியுள்ளார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரு சில புரோக்கர்கள் அதிகாரிக்கு கொடுக்க வேண்டியதை அதிகமாக கொடுத்தால் மட்டுமே பத்திர பதிவு நடைபெறும் எனக் கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் சுமார் 17 பேர் எங்களுடைய சொந்த இடத்தை நான் பத்திர பதிவு செய்வதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டுமா என கூறிக்கொண்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து கலவை பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ், கலவை இன்ஸ்பெக்டர் கவிதா, மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, ரகுராமன், ஷங்கர், எஸ்பி தனிப்படை எஸ்ஐ காந்தி மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கலவை சார் பதிவாளர் அலுவலகத்தில் புரோக்கர்களிடம் லஞ்சம் கொடுத்தால் பத்திரப்பதிவு அமைதியாக நடைபெறுகிறது என கூச்சலிட்டனர். பின்னர் இரவு எட்டு மணி வரை தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திங்கட்கிழமை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வழங்காமல் பத்திர பதிவு செய்ய நான் வருவதாக இன்ஸ்பெக்டர் கவிதா, கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.