கள்ளழகர் கோவிலில் வெகு விமர்சையாக திருக்கல்யாண வைபவம்
அழகர்கோவில் பங்குனி உற்சவத்தையொட்டி, சுந்தராஜபெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட 4 பிராட்டியர்களுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
மேலூர் அருகே அழகர்கோவில் பங்குனி உற்சவத்தையொட்டி, சுந்தராஜபெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளிட்ட 4 பிராட்டியர்களுடன் நடைபெற்ற திருக்கல்யாணம்: சுவாமி மற்றும் அம்பாள் உள்ளிட்ட 6 உற்சவர்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் அரிய நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோவிந்தா என்ற கோஷத்துடன் திருக்கல்யாண வைபோகத்தை கண்டுகளித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்றதுமான அழகர்கோவில் ஸ்ரீசுந்தராஜபெருமாள் என்ற கள்ளழகர் திருக்கோவிலில், 5 நாட்கள் நடைபெறும் பங்குனி மாத உற்சவ விழா கடந்த 22ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனையொட்டி, கள்ளழகர் என்று அழைக்கக்கூடிய சுந்தராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் தினமும் பல்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான இன்று, சுந்தராஜபெருமாள் திருக்கல்யாண வைபோகத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகிய நான்கு பிராட்டியர்களும், பெரியாழ்வாரும் , வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளப்பட்டு திருக்கல்யாண உற்சவம் வெகுவிமர்சியாக நடைபெற்றது.
இதையடுத்து சிறப்பு தீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு திருக்கல்யாண பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்த திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, எங்கும் இல்லாத அரிய நிகழ்வாக ஶ்ரீசுந்தராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஶ்ரீகல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாள், பெரியாழ்வார் உள்ளிட்ட 6 உற்சவர்கள் ஒரே இடத்தில் எழுந்தருளப் பட்ட நிலையில், இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷத்துடன் திருக்கல்யாண வைபோகத்தை கண்டுகளித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் ஆணையர் கலைவாணன், தலைமையில் திருக்கோவில் கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர், மேலும் மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளார் உத்தரவின் பேரில் 50க்கும் மேற்பட்ட காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்...