திருவேற்காடு நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம்

திருவேற்காடு நகராட்சி தி.மு.க. பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.;

Update: 2024-03-14 16:21 GMT

தகுதி நீக்கம் செய்யப்பட்ட கவுன்சிலர்

திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. அதில் 10-வது வார்டு கவுன்சிலராக நளினி குருநாதன் இருந்தார்.

இந்தநிலையில் பெண் கவுன்சிலர் நளினி குருநாதனை, கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீறியதால், சட்ட மீறல்கள் சட்டப்பிரிவு 32-ன் கீழ் கவுன்சிலர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நகராட்சி கமிஷனர் குறிப்பிட்டு இருந்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார். கவுன்சிலரின் குடும்பத்தினரே டெண்டர் எடுப்பது விதிமீறல் ஆகும். மேலும் வேட்பு மனு தாக்கலின் போது உறுதிமொழி பத்திரத்தில் தான் கூலி வேலை செய்து வருவதாக குருநாதன் போலியான தகவலை குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர், கடந்த ஆண்டு தனது வார்டில் எந்தவித பணிகளையும் செய்யவில்லை எனக்கூறி வார்டில் உள்ள பெண்களை அழைத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி நகராட்சி கமிஷனர் அறையில் அமர்ந்து அவதூறாக பேசியதாகவும் புகார்கள் வந்தது.

தொடர்ந்து குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் உண்மையானதாக இல்லை என்பதாலும் பெண் கவுன்சிலர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் மற்றும் கடிதம் வருவதை அறிந்த நளினி குருநாதன்,

தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக நகர மன்ற தலைவர் மூர்த்தியிடம் ராஜினாமா கடிதத்தை நேற்று கொடுத்தார். கவுன்சிலர் நளினி பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து திருவேற்காடு நகராட்சி இணையதளத்தில் உள்ள கவுன்சிலர்கள் பட்டியலில் இருந்து அவரது புகைப்படம் மற்றும் பதவி உடனடியாக நீக்கப்பட்டது. 10-வது வார்டு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News