மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் : மீனவர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர். மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-03-18 01:21 GMT

மீன் வாங்க வந்தவர்கள் 

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திற்கு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சுமார் 50- க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று அதிகாலை கரைக்கு திரும்பினர். இந்த நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் பெரிய அளவிலான சீலா மீன்கள் அதிகளவு கிடைத்தது. அதுபோல் ஊளிமீன், விளைமீன், பாறைமீன், சூரைமீன் போன்ற மீன்களும் அதிக அளவில் கிடைத்தன.

இந்த மீன்களை வாங்க திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திற்கு காலை முதலே பொதுமக்களும், வியாபாரிகளும் திரண்டனர். மீன் வரத்து அதிகம் காணப்பட்டாலும், பொதுமக்களும், வியாபாரிகளும் மீன்களை போட்டிப் போட்டு வாங்கி சென்றதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. நேற்று நடந்த ஏலத்தில் சீலா மீன் 1 கிலோ ரூ.800 வரையும், விளைமீன் மற்றும் பாறை மீன்கள் ரூ.400 முதல் ரூ.500 வரையும், ஊளி மீன் ரூ.500 வரையும், சூரை மீன் ரூ.200 வரையும், அசல மீன் ஒரு கூடை ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், சாளை மீன்கள் வரத்து குறைவாக காணப்பட்டதால் ஒரு கூடை ரூ.3 ஆயிரம் வரையும், கீரிசாளை மீன் கூடை ரூ.2 ஆயிரம் வரையும் விற்பனையானது. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News