காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது
ஓச்சேரி அருகே காரில் கடத்திவரப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரியை அடுத்த பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சித்தஞ்சி பகுதியில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில், அவளூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்மொழி, சரவணமூர்த்தி, ஏழுமலை மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று மடக்கினர்.
அப்போது காரில் இருந்து ஒருவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். மேலும் காரில் இருந்த 3 பேரை போலீசார் பிடித்து கொண்டனர். பின்னர் காரை சோதனை செய்ததில் 90 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், கார் டிரைவர் கரிம் (வயது 29), வேலூர் அல்லாபுரம் பகுதியை சேர்ந்த அமுல்ராஜ் (29), சத்துவாச்சாரி பாலாறு கார்டன் பகுதியை சேர்ந்த இத்ரிஸ் (31) மற்றும் தப்பி ஓடிய சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஆசிப் (32) என்பதும் தெரியவந்தது.
பின்னா் போலீசார் 90 கிலோ குட்காவையும், காரையும் பறிமுதல் செய்தனர். [பின்னர்,இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கரிம், அமுல்ராஜ், இத்ரிஸ் ஆகிேயாரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.