ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ்சில் டயர் கழன்றதால் பரபரப்பு
குமரியில் ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ்சில் திடீரென டயர் கழன்றதால் பரபரப்பு உண்டானது; அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி - தடிக்காரன்கோணம் இடையே தடம் எண் 19 என்ற பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் திட்டுவிளை, பூதப்பாண்டி, ஆண்டி தோப்பு ஆகிய பகுதிலுள்ள பள்ளி மாணவர் மற்றும் அண்ணா கல்லூரிக்கு ஏராளமான மாணவ மாணவிகள் செல்வது வழக்கம்.
இதனால் காலை முதலே இந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று இந்த பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சீதப்பால், நாஞ்சில் நாடு புத்தனார் பாலத்தில் வளைவில் திரும்பியபோது பஸ் டிரைவர் இருக்கை கீழே உள்ள டயர் மெயின் ஆக்சில் ஒடிந்து டயர் கழன்று ஓடியது.
குறுகிய வளைவு என்பதால் பஸ் மெதுவாக வந்தது. மேலும் பஸ் திரும்பும் போது டயர் கழன்றதால் சாலையில் ஒரு புறமாக சாய்ந்து பஸ் நின்றது இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுவே நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் பகுதியில் இந்த சம்பவம் ஏற்பட்டிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த பழைய பேருந்தை மாற்றிவிட்டு புதிய பேருந்து இயக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.