திருப்பூர் ஏவிபி தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா !
ஏவிபி தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில் போட்டி நிறைந்த இந்த உலகத்தில் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என கல்வி இணை இயக்குனர் பேச்சு.
By : King 24x7 Angel
Update: 2024-02-24 10:33 GMT
திருப்பூர் இன்று பட்டம் பெறும் மாணவிகள் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று என்று ஏ.வி.பி. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி பேசினார். திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தலைவர் அ.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கதிரேசன் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்தது. அந்த காலத்திலே பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். இந்த நாடு முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு, முதல் தலைமுறையினருக்கு கல்லூரியில் படிப்பதற்கு கல்வி இலவசம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இன்றைய அரசு ஒரு பெண் குழந்தை கூட கல்வியில் பின்தங்கி விடக்கூடாது, இடையில் நின்று விடக்கூடாது என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தங்களது வாழ்க்கை முழுவதும் உழைப்பை தங்களது ரத்தத்தை வியர்வையாக சிந்தி இன்று நீங்கள் பட்டதாரிகளாக உருவெடுப்பதற்கு காரணமாக அமைந்த பெற்றோருக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும். வாழ்க்கையில் உயர்வதற்கு நன்றி சொல்வதும், நாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதும் மிகவும் முக்கியம். இன்று பட்டம் பெறும் நீங்கள் என்ன படித்திருந்தாலும் இந்த உலகம் உங்களுக்கு கம்பளம் விரிக்க தயாராக உள்ளது. பல ஆயிரக்கணக்கான வேலை உங்கள் கண்முன் காத்திருக்கிறது. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முதலில் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்கள் நோக்கத்தை நிறைவேற்றக் கூடாதபடி கவனச்சிதறல்களை ஏற்படுத்தும் பல காரியங்கள் உண்டு. நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்குகிறீர்களோ அதனால் மட்டுமே வாழ்க்கையில் உயர முடியும். உங்களுக்குள் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். உங்கள் தனித்திறமைகளை கண்டறிந்து அதை வளர்க்க வேண்டும். நமது வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துக்கம் என்பது நிரந்தரம் இல்லை. எல்லாமே கடந்து போகும். இன்றைய மாணவர்கள் பாடப்புத்தகம் மதிப்பெண்களை மட்டுமே நோக்கி இருப்பதால், அவர்களுக்கு வாழ்க்கையில் மதிப்புகளை நாம் கற்றுக் கொடுப்பதில்லை. வாழ்க்கையில் போராட கற்றுக் கொடுப்பதில்லை. செல்போன் பயன்படுத்துவது நல்ல விஷயம்தான். அதை சரியான முறையில் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். இன்று குழந்தைகளுக்கு சினிமா என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது. காதல் என்பது பாடாய் படுத்துகிறது. எனவே சினிமாவை ஒரு பொழுதுபோக்காக மட்டும் வைத்துக் கொண்டு, தங்களது இலக்கை மட்டும் நோக்கி முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பல்கலை கழக அளவில் பதக்கங்கள் பெற்ற 27 மாணவிகள் உள்பட 900 மாணவிகளுக்கு பட்டமும், பதக்கம் பெற்றவர்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.